Wednesday 2 November 2016

Ease Of Doing Business

Ease Of Doing Business என்ற பெயரில் இந்திய மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலை உலக வங்கி (World Bank) வெளியிட்டிருக்கிறது.
அதிலும் அந்த தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 18 வது இடத்தில் இருப்பதாக இந்தியாவின் So called சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவே தங்கள் சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து விட்டு தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் சேவைமான்களான பன்னாட்டு தொழிலதிபர்களால் தமிழக அரசினைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதே சிரமமாக இருக்கிறது. அவர்களிடம் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் பேச முடியவில்லை என்று இந்திய அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே பலமுறை சொல்லி வருகிறார்கள். முட்டிப் போட்டு நிற்கிற தமிழக அமைச்சர்களைப் பார்த்துப் பழகிப் போன நாமும் இந்ந கூற்றுக்களை அப்பாவித்தனமாக நம்புவோம். இப்படித்தான் பியூஷ் கோயல் என்ற பாஜக அமைச்சர் தமிழக முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என பேசிய காணொளி Whats app ல் பரவலாக பரப்பப்பட்டது.

ஆந்திராவைப் பாருங்கள் Ease Of Doing Business பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது என்று வேறு நம்மிடம் அறிவுரை சொல்கிறார்கள். UDAY என்ற மடுமுழுங்கி திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்த போது, தமிழகத்தினை கையெழுத்திடச் செய்யத்தான் பியூஷ் கோயல் இப்படிப்பட்ட மறைமுக மிரட்டல்களை விடுத்தார். தமிழகத்தை முன்னேற்றியே தீர வேண்டும் என்பதில்தான் பாஜக வின் பியூஷ் கோயலுக்கு என்ன ஒரு அக்கறை!

இந்த அக்கறையை காவிரி நீர் பங்கீட்டில் காட்டியிருந்தாலாவது தமிழக விவசாயிகள் பிழைத்திருப்பர். ஷேல் கேஸ் என்ற பெயரில் காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் ONGC ன் திரை மறைவில் பியூஷ் கோயலின் முகமும் இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வாஷிங்டனில் நடைபெற்ற India-US Ministerial Energy Dialogue கூட்டத்தில் இந்தியாவில் ஷேல் கேஸ், எண்ணெய் போன்றவற்றை எடுக்க வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் பியூஷ் கோயல் (http://pib.nic.in/newsite/printrelease.aspx?relid=127122). காவேரி டெல்டாவினை பாழாக்கிக் கொண்டு, மறைமுகமாக ஷேல் கேஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ONGC ன் இயக்குநருக்கு Most Eco Friendly Company என்ற விருதினைக் கொடுத்து கவுரவித்தவரும் இவர்தான். மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் இருக்கும் எதிர்ப்பினை முறியடிக்கத்தான் "தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செயல்படவில்லை" என்றெல்லாம் பேசி வந்தார் இந்த நபர்.

UDAY திட்டத்தில் கையெழுத்திட்டத்தின் மூலம் தனியார் மின்சாரத்தினால் மின்சார வாரியத்துக்கு உருவான கடன் இப்போது பிரம்மாண்டமான ஒன்றாக தமிழக அரசின் முன் நிற்கிறது. இனி இதற்காக மின்கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும். கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் எடுப்பதாக சொல்லி 20000 கோடி கடனில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் குஜராத்தின் GSPC (Gujarat State Petroleum Corporation) ஐ ONGC நிறுவனம் மூலமாக வாங்கி குஜராத்தின் கடனை நம் தலையில் ஏற்றி குஜராத் அரசையும், மார்வாடிகளின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் மத்திய அரசு தான் நம்முடைய வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுகிறதாம்.

வளரும் நாடுகளின் வளர்ச்சிக்காக கருணையுடன் கந்து வட்டிக்கு கடனை அள்ளி வழங்கும் உலக வங்கிக்கு இந்திய மாநிலங்களின் வளர்ச்சியின் மீது , அதிலும் தமிழகத்தின் வளர்ச்சியன் மீது இருக்கும் அக்கறை நமக்கெல்லாம் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கச் செய்வதாக உள்ளது!

உண்மையில் தமிழகம் தொழில் நடத்த முடியாத மாநிலமா என்றால் இல்லை. இந்தியாவின் உற்பத்தித் துறைகளில் தமிழகம்தான் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இந்தியாவின் GDP-யில் இரண்டாவது பெரிய பங்கினை தமிழகம்தான் அளிக்கிறது. 2014-15 ஆண்டின் கணக்கின் படி தமிழகத்தின் GDP மதிப்பு 150 பில்லியன் டாலர். அதாவது சுமார் 10லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தில் ஏராளமான சிறு, குறு தொழில்களும், குடிசைத் தொழில்களும் நடைபெற்று வருகின்றன. விசைத்தறி தொழில், அச்சுத் தொழில், தோல் உற்பத்தி, ஆலைத் தொழில், பேப்பர் மில்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் பல்வேறு பட்டறைகளும் தமிழக உற்பத்தித் துறையில் பெரும் பங்கினை ஆற்றி வருகின்றன. இவை தவிர அரசு தொழிற்சாலைகளும், பல்வேறு சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் 25% ஆட்டோமொபைல் சாதனங்கள் மற்றும் உதிரிப் பொருட்களின் உற்பத்தியையும், 18% மின்சாதனப் பொருட்களின் உற்பத்தியையும், 19% டெக்ஸ்டைல் உற்பத்தியையும் தமிழகம்தான் அளிக்கிறது. 36,869 தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இது இந்தியாவிலே அதிகமானது. 2012-13ஆம் ஆண்டின் கணக்குப் படி MSME என்று சொல்லக் கூடிய Micro(Investment upto 25 lakhs rupees) , Small(25 lakh to 5 crore), Medium(5 crore to 10 crore) Enterprises சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் மட்டும் சுமார் 58 லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். ஏராளமானோர் இத்தொழில்களினால் மறைமுக வேலை வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் Ease of doing business தமிழகத்தில் இல்லை என்று இவர்கள் சொல்வது யாருக்கு?

உள்நாட்டுத் தொழிலை அழிக்கிற வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு இங்கிருக்கிற சட்ட விதிகள் தடையாக இருக்கின்றன. அவர்களுக்கு வரி விதிப்பு முறைகளும், இடம் கொடுப்பதில் இருக்கும் விதிகளும் தளர்த்தப்பட்டு, முழு நேர இலவச அல்லது சலுகை விலை மின்சாரமும் அளிக்க வேண்டும். தொழிலாளர் சட்ட ஒப்பந்த விதிகள் தளர்த்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலதிபர்களின் நோக்கம். தமிழக இயற்கை வளத்தையும், மனித வளத்தையும் எந்த தடையுமின்றி பயன்படுத்தி கொள்ளை லாபம் பெறுதலே அவர்களின் நோக்கம். அந்த விதிகளை தளர்த்தி பெரு லாபம் பார்க்கத்தான் இந்த Ease of doing business என்ற தரப்பட்டியலை வெளியிட்டு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதன்மூலம் மக்களிடையே ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி, கார்பரேட் நிறுவனங்களின் Condition களை தடையின்றி ஏற்றுக் கொண்டு அவர்கள் நம்மை சுரண்ட நாமே அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் நோக்கம்.

மேலும் தொழில் நிறுவனங்களை அனுமதிப்பது குறித்தான மாநிலங்களின் உரிமையைப் பறிக்க one india என்ற Single window clearance திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. மொத்தமாக இந்த உரிமை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விட்டால் நாடு முழுக்க தொழில் வளர்ச்சி சீராக இருக்கும் என்று நம் மக்களை நம்ப வைப்பதும் இந்த அறிக்கைகளின் நோக்கம்.

ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பு திட்டத்தின் மூலம் மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்திருக்கிறது. உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களுக்குத்தான் GST னால் பெரும் இழப்பு ஏற்படும். அதனால் உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலமான தமிழகம் அதைக் கடுமையாக எதிர்த்தது. இந்தியாவில் GST மசோதாவை கடைசி வரை எதிர்த்த ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் அனுமதி இன்றியே அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. GST னால் தமிழக அரசுக்கு 9270 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும். இப்படி நம் வருமானத்தை தட்டிப் பறிக்கிற இவர்கள் சொல்கிறார்கள் தமிழகம் உற்பத்தியில் பின் தங்குகிறது என்று.

நம்மை ஆள்வோர் நமக்கு வேலை செய்கிறார்களா? உலக வங்கியின் கொள்ளையடிக்கும் செயல் திட்டத்திற்கு வேலை செய்கிறார்களா? என்ற கேள்விக்கு நாம் இன்னும் விடை அறிந்து கொள்ளவில்லையென்றால் நம்மைவிட அப்பாவிகள் வேறு யாரும் இருக்க முடியாது. தடையற்ற பன்னாட்டு உணவு இறக்குமதியை அனுமதிப்பதற்கும், ரேசன் கடைகளை மூடுவதற்கும் WTO வில் கையெழுத்திட்டு விட்டு, படிப்படியாக ஒவ்வொரு பொருளின் மானியத்தையும் நீக்கி வரும் இந்திய மோடி அரசு, Ease of Doing Business என்று அறிக்கைகளைக் காட்டி மாநில மக்களை மிரட்டுவது எதற்காக என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாநிலத்தின் அனைத்து துறைகளையும் வெளிநாட்டு முதலீட்டுக்கு திறந்து விட்டதன் விளைவே ஆந்திராவுக்கு முதலிடத்தைக் கொடுத்து சிறந்த அடிமை என்ற பட்டம் சூட்டியிருக்கிறார்கள். Ease of Doing business என்ற பட்டியலில் தமிழகம் பின்னோக்கி சென்றால் கவலைப்பட வேண்டியது தமிழக மக்களல்ல. ஏனென்றால் Ease of Doing business என்பது தமிழக மக்களை சுரண்டுவதற்கு மார்வாடிகளுக்கும், வெள்ளையனுக்கும் தடையற்ற அனுமதி அளிப்பது.

No comments:

Post a Comment