Thursday 24 July 2014

மோடியும், பங்குச் சந்தையும்!

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, பிறந்த முதல் பிரதமர் என்ற பெயர் பெற்ற நரேந்திரமோடி, குஜராத் மாடலில், நாடு முழுமையிலும் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுவிடுவார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். நரேந்திரமோடி வெற்றிபெற்றவுடனே, பங்கு மார்க்கெட்டில் ஒரு அதிர்வு ஏற்படத்தொடங்கியது. பங்குகளின் விலையெல்லாம் உயர தொடங்கியது. சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. சரிந்து கிடந்த இந்திய ரூபாயின் மதிப்பும் உயரத்தொடங்கியது. ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய்க்கு மேல் அல்லாடிக்கொண்டிருந்த நிலையில், இப்போது 58 ரூபாய் 47 காசுகள் என்ற நிலையை நேற்று காலையிலேயே தொட்டுவிட்டது.
MODI-MARKET-BIG
இந்திய பொருளாதாரத்தில், மோடியின் அரசால் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில், இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் தொடங்கிவிட்டன. இன்னும் நரேந்திரமோடி பதவியேற்று எடுக்கப்போகும் பொருளாதார நடவடிக்கையை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை தொடும். பங்குகளின் விலையெல்லாம் அபரிமிதமாக உயர்ந்துவிடும். ரூபாயின் மதிப்பும் இனியும் அதிகமாக உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வர்த்தக நிறுவனங்களிடையே துளிர் விட்டதால், இன்னும் அதிகமான முதலீடுகள் நாட்டில் வரத்தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தனி மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இனி கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தால், கொள்கை தள்ளாட்டம் நிச்சயமாக பா.ஜ.க.விற்கு இருக்காது. மோடியும், இரும்பு மனிதர். எல்லா நடவடிக்கைகளையும் உறுதியாக எடுப்பார். பல பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவருவார். ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை நிச்சயமாக குறைக்கும், அல்லது மோடி அரசாங்கம் குறைக்க வைக்கும் என்ற திண்ணமான எண்ணம் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இடையே உருவாகிவிட்டது.
இந்தியா மீது வெளிநாடுகளுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது. இனி வெள்ளமென முதலீடுகள் குவியும். தொழில்கள் பெருகும். பொருளாதார நிலை உயருவது மட்டுமல்ல, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு ஆட்சி அமைந்தாலும், தேன்நிலவு என்று சிலமாதங்கள் இருக்கும். புதிய அரசு முழுமையாக காலூன்றியபிறகுதான், அந்த அரசிடம் இருந்து வேகத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், மோடியை பொறுத்தமட்டில், மக்களும் சரி, தொழில் நிறுவனங்களும் சரி, வெளிநாட்டு நிறுவனங்களும் சரி, தேன் நிலவு காலமெல்லாம் கிடையாது, உடனடியாக பொருளாதார சீர்திருத்த சக்கரம் சுழல தொடங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
நரேந்திரமோடியை அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதுவரை எண்ணிய எண்ணம் வேறு. 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசாங்கம், தேர்தல் முடிவுக்கு முன்பே மோடிக்கு விசா வழங்குவோம் என்று சூசகமாக அறிவித்து விட்டது. மோடி வெற்றி பெற்றவுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மோடிக்கு சரித்திர புகழ் மிக்க வெற்றியை பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பும் விடுத்துவிட்டார். இருநாட்டு உறவுகளும் மோடி அரசாங்கத்தால் மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்துவிட்டார். அவரைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து வந்த மற்ற வாழ்த்து செய்திகளை பார்த்தால், இந்தியாஅமெரிக்கா இடையே வணிகம் வளரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சீனா நாட்டில் இருந்து வந்த வாழ்த்துகள் எல்லாம் இந்தியசீனா உறவை வலுப்படுத்துவதை மட்டுமல்லாமல், சீன முதலீடுகளுக்கு, இந்தியா கதவை திறந்து வைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள் எல்லாம் மோடியின் வெற்றியை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்து நாட்டு பிரதமர், மோடியுடன் டெலிபோனில் வாழ்த்து தெரிவிக்கும்போது குறிப்பிட்டு, தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே கூட, மோடிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, எங்கள் நாட்டிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுபோல், இஸ்ரேல் நாடு தொடங்கி பல நாடுகள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறது. எனவே, வெளிநாட்டு உறவுகளில், மோடியின் தலைமை ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.