Friday 4 November 2016

கந்தசஷ்டி

v  உலகெலாம் நிறைந்து விளங்கு கின்ற எல்லாம்வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானு டைய அம்சமான கந்தனின் கந்த ஷஷ்டி தனித்துவமான மகிமையை உடையது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
v  சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

v  ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது

v  கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
கண்ணாடிக்குஅபிஷேகம்
v  ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வயானை திருமணம்
v  சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.


v  கந்தன் கருணை புரியும் இந்தக் கந்த ஷஷ்டி விரதம் ஐப்பசி மாதத்தில் வருகின்ற அமாவாசையை அடுத்து வளர்பிறை பிரதமை முதல் ஷஷ்டி ஈறாக ஆறு நாள்களுக்கு அனுட்டிக்கப்படும். முருகப் பெருமான் சூரபன்மனாதியோரைச் சங்காரஞ் செய்த நாள் ஷஷ்டியாகும். அதுவே கந்தஷஷ்டி என அழைக்கப்படுகிறது.
v  முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.
v  சிவபெருமானும் முருகனும் ஒன்றுதான். சிவன் வேறு முருகன் வேறு அல்லர். இருவரும் ஒரே அம்சமானவர் கள்தான். சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையோடு ஆவல் மீதூரப் பெற்றவளாய் அரவணைத்து அள்ளி எடுத்தாள் ஆதிபராசக்தி யான அம்பிகை உமையவள், அவ்வாறு உமாதேவியார் ஆவலாக அரவணைத்து அணைத்தெடுத்த போது ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலக முய்ய என்பது கச்சியப்பர் திருவாக்கு. முருகப் பெருமான் உதித்தாரே தவிர பிறக்கவில்லை. இதிலே ஓர் ஆழ்ந்த மிக அர்த்தபுஷ்டி யான கருத்தொன்று தொக்கி நிற்கிறது. அது யாதெனில் சூரியன் ஒவ்வொரு நாளும் மறைந்து போகின்றான், பின்னர் மறுநாள் காலையிலே கிழக்குத் திசையிலே உதிக்கின்றார்ன். பின்பு சூரியன் மாலையிலே அழகாக இரத்தச் சிவப்பு நிறமாக மறைகின்றான். அவனுடைய அழகும் உதிக்கின்ற லாவண் யமும் சொல்லில் வடிக்க முடியாத ஒன்று. அதேபோலவே முருகப் பெருமானும் ஆதியும் அந்தமும் இல்லாத ஒருவரே. ஏற்கனவே இருக்கின்ற ஒரு பொருள்தான் மறைந்து பின்பு உதிப்பது போலவே முருகனும் இந்த உலகம் உய்ய சூரபன்மனாதியோரை அழிக்க வந்து உதித்தான் என்பதே இக்கருத்தாகும்.


v  அதனால்தான் கந்தஷஷ்டி விரத கால நாட்களில் கந்த புராணம் படிப்பார்கள். கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய இக் கந்த புராணம் முருகனுடைய புகழ்மிக்க வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற ஒரு தெய்வீக புராணமாகும்

v  கொடுமையே உருவாக வந்து தேவர்களையும் முனிவர்களையும் ரிஷிகளையும் தவ சிரேஷ்டர்களையும் துன்பத்துக்குள்ளாக்கிக் கொடுங்கோலாட்சி புரிந்த சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் ஆகியோரை அழிக்கவே முருகன் உதயமாயினான், அந்தத் தத்துவத்தை விளக்குவதே இந்த கந்தஷஷ்டி. இந்த அரிய பெரிய முருகனுக்குரிய விரதத்தை முறையாகவே அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த விரதத்தை விளையாட்டாக எண்ணக்கூடாது. “நானும் விரதமிருக்கிறேன்என்று சொல்லிக்கொண்டு ஐயரிடம் தர்ப்பையையும் வாங்கிக் கைவிரலில் அணிந்து கொண்டு கெட்ட சிந்தனையுடன் இருந்தால் பாவ மூட்டையே வந்து சேரும்.

v  முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் முருகன், அவனுடைய திருவருட் கருணைத் திறத்துக்குப் பாத்திரமாகி இவ்வுலகில் புத்திர சந்தானம் அடைந்து சகல செளபாக்கியங்களுடன் வாழ்வதற்கு இந்த விரதம் உகந்ததாகக் கருதப்படுகின்றது. முருகன் தமிழ்க் கடவுள். ஆதலால் முருகனுடைய திருவருள் பரிபூரணமாகக் கிட்ட வேண்டுமென்று தமிழ் மக்கள் நோன்பிருக்கும் பிரதான விரதம் இதுவாகும்.

v  சிவபெருமானுடைய அருட்பெருங் கருணையைப் பெறுவதற்கு சிவராத்திரி விரதமிருப்பது போல முருகனுடைய திவ்ய அருட் பெருங் கருணா கடாட்சத்தைப் பெறுவதற்கு இந்தக் கந்த ஷஷ்டி விரதம் உகந்ததாகக் கூறப்படுகின்றது.

v  இந்த விரதம் நோற்பவர்கள் ஆறுநாள்களும் ஆகாரமேயின்றி வெறும் பச்சைத் தண்ணீர் மட்டும் குடித்தும் இருப்பர். சிலர் மதியம் ஒருபொழுது உணவு எடுத்தும் இரவு பால் பழம் அருந்தியும் இருப்பர். சிலர் ஆறு மிளகும் தண்ணீரும் எடுத்து இருப்பர். இந்த விரதம் ஆறு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்என்றார்கள்.

v  அதன் விளக்கம் என்னவெனில் சட்டியில் அதாவது கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் பெண்ணுடைய கர்ப்பப் பையிலே சிசு உருவாகும் என்பதே

v  கலியுக வரதனும் கைகளால் தொழுவோர்க்கு கருணை புரிபவருமாகிய முருகப் பெருமான் அருள் சுரக்கும் இக்கந்த ஷஷ்டி விரதத்தை அனுஷ்டித்து கந்தப் பெருமானுடைய கருணைக்குப் பாத்திரமாகலாம்.

கந்த சஷ்டி விரத முறை
v  விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
v  கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.
v  ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை
v  இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

v  ஆறுநாள் விரதம் பூர்த்திபண்ணி ஏழாம் நாள் அந்தணர்களுக்குத் தானம் கொடுத்துப் பாறணை பண்ணலாம். இந்த மகிமையுள்ள விரதத்தை முறையாக அனுஷட்டித்து அவனருளாலே அவன்தாள் வணங்கி, சதுர்வித புருஷார்த்தங்களை யடைந்து உலகவாழ்வில் இன்புற்றிருப் போமாக……………